மேஜிக் நம்பர் 270...! அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் முக்கிய விஷயம்
மேஜிக் நம்பர் 270...! அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் முக்கிய விஷயம்
UPDATED : நவ 06, 2024 07:12 AM
ADDED : நவ 06, 2024 06:58 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மேஜிக் நம்பர் 270 எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. அங்குள்ள தேர்தல் நடைமுறைகளின் படி, அதிபரை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதில்லை. பொதுமக்கள் ஓட்டு போட்ட பின்னர், அந்த ஓட்டுகள் அனைத்தும் ஒவ்வொரு மாகாணத்திலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர் போட்டியிடும் கட்சி நியமிக்கும் பிரதிநிதிக்கே செல்லும்.
எனவே, வாக்காளர்கள் மட்டுமின்றி கட்சியின் பிரதிநிதிகளின் வாக்குகளும் முக்கியம். இன்னும் சொல்ல வேண்டுமானால், எந்த வேட்பாளருக்கு அதிக பிரதிநிதிகள் ஓட்டு போடுகிறார்களோ அவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது, மக்கள் ஓட்டு அளித்து அனைத்து மாகாணங்களிலும் பெரும்பான்மை ஓட்டுகளை பெறும் வேட்பாளருக்கு அந்தந்த மாகாணங்களில் இருக்கும் அனைத்து பிரதிநிதிகளின் வாக்குகள் வழங்கப்படும்.
அதன்படி ஒட்டு மொத்தமாக உள்ள 538 பிரதிநிதிகளில், 270 பிரதிநிதிகள் யாருக்கு ஓட்டளிக்கிறார்களோ அவரே வெற்றியாளர். அதாவது, புதிய அதிபராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் மேஜிக் நம்பர் 270 என்பது அமெரிக்க தேர்தலில் தவிர்க்க முடியாத எண்ணாக பார்க்கப்படுகிறது.
அதுபற்றிய விரிவான விவரங்கள் இதோ;
அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவில் சிறப்பான அம்சம் இருக்கிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கும் வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு நடக்கும் முன்பாகவே வெவ்வேறு நாள்களில் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். இந்த நடைமுறையின்படி இம்முறையும் அமெரிக்க தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. நடப்பு தேர்தலில் முன்கூட்டியே ஓட்டுப்போடலாம் என்ற நடைமுறையை பின்பற்றி சுமார் 8 கோடி வாக்காளர்கள் ஓட்டை செலுத்தி இருக்கின்றனர்.
நவ.5ம் தேதி மற்ற தரப்பினரும் ஓட்டு அளித்துவிட்ட நிலையில், வேட்பாளரின் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஓட்டு போட வேண்டும். இங்கு தான் மேஜிக் நம்பர் 270 என்ற எண் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அந்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த 50 மாகாணங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, பிரதிநிதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது. அப்படி பார்க்கையில் 50 மாகாணங்களில் மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த 538 பிரதிநிதிகளில் பாதிக்கும் மேலாக அதாவது 270 பேர் எந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபராக முடியும். பொதுமக்களின் ஓட்டுக்களை விட, பிரதிநிதிகள் ஓட்டுக்களே அதிபரை தீர்மானிக்கும். ஒரு மாகாணத்தில் பொதுமக்களின் ஓட்டுகளை எந்த வேட்பாளர் அதிகம் பெறுகிறாரோ அவருக்கே பிரதிநிதிகள் ஓட்டுகள் சென்றுவிடும்.
தற்போது பொதுமக்கள் ஓட்டளித்துவிட்டாலும், டிசம்பர் மாதத்தின் மத்தியில் பிரதிநிதிகளின் ஓட்டுப்பதிவு நடைபெறும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பிரதிநிதிகள் ஓட்டுகளை அமெரிக்க பார்லி. எண்ணி அதன் பிறகே வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். அதே நேரம், சில மாகாணங்களில் பிரதிநிதி, தங்களது கட்சி வேட்பாளருக்கு பதிலாக மாற்றுக் கட்சி வேட்பாளருக்கும் ஓட்டளிக்க முடியும். அப்படிப்பட்ட நிகழ்வுகளும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்திருக்கின்றன.
எனவே, பொதுமக்கள் அதிகம் பேர் ஓட்டளித்தாலும், பிரதிநிதிகள் ஓட்டு என்பது முக்கியம். ஆகையால், மேஜிக் நம்பர் 270 என்பது அமெரிக்க அதிபர் தேர்தலில் சக்திவாய்ந்த மற்றும் தவிர்க்க முடியாத எண்ணாக உற்று நோக்கப்படுகிறது.