துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
ADDED : அக் 28, 2025 11:44 AM

அங்காரா: மேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. இந்த நில அதிர்வால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி நகரத்தின் மையத்தில் பூமிக்கு அடியில் 5.99 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கின. இஸ்தான்புல், புர்சா, மனிசா, இஷ்மிர் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும், கடந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலவீனமான கட்டடங்கள், இந்த முறை ஏற்பட்ட நில அதிர்வால் சரிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து உள்துறை அமைச்சர் அலி யேர்லிகயா கூறுகையில், 'சிந்திர்கியில் பயன்பாடில்லாத 3 கட்டடங்கள் மற்றும் இரண்டடுக்கு கடையும் இடிந்து விழுந்துள்ளன. இவை அனைத்தும் கடந்த முறை ஏற்பட்ட நில நடுக்கத்தால் பலவீனமான கட்டடங்கள் ஆகும்,' என்றார்.

