ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவு
UPDATED : செப் 27, 2024 02:11 PM
ADDED : செப் 27, 2024 12:06 PM

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
ஐ.நா., சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்தாலும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்கள். மீதமுள்ள 10 நாடுகள், 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்கள். நிரந்தர உறுப்பினராக எங்களுக்கும் இடம் தர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கை.
இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் கூறியதாவது: பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது: ஐ.நா.,வை மேலும் திறனுடையதாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு சபை அதிகளவு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலின் பணி முறைகளில் மாற்றம், பெரிய குற்றச் செயல்களில் வீட்டோ உரிமையின் வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

