இது அர்த்தமற்ற செயல்; இந்நாள் அதிபர் பைடனுக்கு, வருங்கால அதிபர் டிரம்ப் கண்டிப்பு
இது அர்த்தமற்ற செயல்; இந்நாள் அதிபர் பைடனுக்கு, வருங்கால அதிபர் டிரம்ப் கண்டிப்பு
ADDED : டிச 25, 2024 08:10 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் 37 கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த, அதிபர் பைடனுக்கு, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் களம் இறங்கிய, டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்த சூழலில், தற்போதை அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பேருக்கு, அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்' என ஜோ பைடன் கூறியுள்ளார். இந்நிலையில், கைதிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த, அதிபர் பைடனுக்கு, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜோ பைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேருக்கு மரண தண்டனையை குறைத்தார். ஒவ்வொருவரின் செயல்களைக் கேட்டால், அவர் இதைச் ஏன் செய்தார் என்று நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் கூட, இதனை நம்ப மாட்டார்கள்'. இவ்வாறு பைடனை, டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.