இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது மாலத்தீவின் நோக்கமல்ல: முகமது முய்சு
இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது மாலத்தீவின் நோக்கமல்ல: முகமது முய்சு
ADDED : செப் 28, 2024 06:29 AM

நியூயார்க்: “மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது எங்கள் அரசின் நோக்கமல்ல,” என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான மாலத்தீவில், கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். சீன ஆதரவாளரான இவர், மாலத்தீவில் பாதுகாப்பு பணியில் இருந்த நம் ராணுவ வீரர்களை வெளியேறும்படி உத்தரவிட்டார்.
இதன்படி கடந்த மே மாதம், அங்கு மூன்று விமான தளங்களை பாதுகாத்து வந்த நம் வீரர்கள் 90 பேர், மாலத்தீவில் இருந்து வெளியேறினர். இதனால் இந்தியா -- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஐ.நா., பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலையில் பேசினார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
எந்த சூழலிலும், எந்த நாட்டிற்கு எதிராகவும் மாலத்தீவு அரசு இருந்ததில்லை. ராணுவ வீரர்களை வெளியேற்றிய விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை; அது எங்கள் நோக்கமும் அல்ல.
வெளிநாட்டு ராணுவத்தினர் எங்கள் நாட்டில் இருந்தது, பல்வேறு பிரச்னைகளை எழுப்பியது. மாலத்தீவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இருப்பதை கூட, எங்கள் நாட்டு மக்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதுாறாக பேசிய துணை அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைவனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, யாரையும் இப்படி அவமதிப்பதை நான் ஏற்கமாட்டேன்.
இவ்வாறு கூறினார்.