ADDED : ஜன 31, 2025 12:28 AM
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில், 2023ல் முஸ்லிம் மதத்தின் புனித நுாலான குரானை எரித்து போராட்டம் நடத்தியவரை, நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், ஈராக்கைச் சேர்ந்த சல்வான் மோமிகா, 38, என்பவர் வசித்து வந்தார்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2023ம் ஆண்டு முஸ்லிம் மதத்தின் புனித நுாலான குரானின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேபோல் பல்வேறு போராட்டங்களையும் சல்வான் மோமிகா முன்னெடுத்தார். இது, முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சல்வான் மோமிகாவை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக ஸ்வீடன் போலீசார், சல்வான் மோமிகா மீது இன வெறுப்பை துாண்டும் வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அறிவிக்க இருந்த நிலையில், சோடெர்டால்ஜே நகரில் உள்ள அவரது வீட்டில், சல்வான் மோமிகாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர்.
இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். போலீசார், சல்வான் மோமிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இது தொடர்பாக, ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் கூறுகையில், ''சல்வான் மோமிகாவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.

