போர்க்களத்தில் இல்லை மனித குல வெற்றி; ஐ.நா., பொதுச்சபையில் மோடி உரை
போர்க்களத்தில் இல்லை மனித குல வெற்றி; ஐ.நா., பொதுச்சபையில் மோடி உரை
UPDATED : செப் 23, 2024 10:34 PM
ADDED : செப் 23, 2024 09:40 PM

ஐக்கிய நாடுகள்: '' மனித குலத்தின் வெற்றி என்பது, கூட்டு பலத்தில் தான் உள்ளது. போர்க்களத்தில் அல்ல,'' என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
3வது முறை
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 79 வது பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜூன் மாதம், மனித குல வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தேர்தலில், 3வது முறையாக சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர். உலக மக்கள் தொகையில் 6 ல் ஒரு பங்கினரின் குரலை எதிரொலிக்க இங்கு வந்துள்ளேன்.
தயார்
இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து அகற்றியதுடன், நிலையான வளர்ச்சி என்பது சாத்தியம் என்பதை உணர்த்தி உள்ளோம். இந்த அனுபவத்தை உலகின் தெற்கு பகுதிக்கும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.
முக்கயம்
மனிதநேயத்தின் வெற்றி என்பது கூட்டு பலத்தில் உள்ளது. போர்க்களத்தில் அல்ல. உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு, சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் என்பது முக்கியம். இதனை நோக்கிய முதல் நடவடிக்கையாக ஜி20 அமைப்பில் ஆப்ரிக்கா யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
அச்சுறுத்தல்
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தொடரும் நிலையில், மறுபுறம், சைபர் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியன புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரங்களில், உலகத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
உறுதி
தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமமான ஒழுங்குமுறை தேவை. டிஜிட்டல் பொது கட்டமைப்பு என்பது ஒரு பாலமாக இருக்க வேண்டும். தடையாக இருக்கக்கூடாது. உலக நலனுக்காக டிஜிட்டல் பொது கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் ஆகியவற்றுக்கு உறுதியாக உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.