இதுக்கு பேருதான் அசுர வளர்ச்சியோ... உலகின் 4வது பெரிய பணக்காரர் ஜுக்கர்பெர்க்; முதலிடம் யார் தெரியுமா?
இதுக்கு பேருதான் அசுர வளர்ச்சியோ... உலகின் 4வது பெரிய பணக்காரர் ஜுக்கர்பெர்க்; முதலிடம் யார் தெரியுமா?
UPDATED : செப் 30, 2024 06:08 PM
ADDED : செப் 30, 2024 02:20 PM

நியூயார்க்: உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
புளும்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 200 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களைக் கொண்ட பணக்காரர்கள் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். இதன்மூலம், உலகின் 4வது மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
மொத்தம் 201 பில்லியன் அமெரிக்கா டாலராக அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும், ஓரக்கல் இணை நிறுவனர் லேரி எல்லிசன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,க்களான பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரை விட அதிகளவு வருவாய் ஈட்டியுள்ளார். அதாவது, 73.4 பில்லியன் சொத்துக்களை பெற்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 60 சதவீத சொத்துக்கள் உயர்ந்துள்ளது. அவரது மெட்டா நிறுவன பங்குகள் வரலாறு காணாத வகையில் 560 அமெரிக்க டாலர் வரை எட்டியது. அண்மையில் நடந்த மெட்டா கனெக்ட் 2024 நிகழ்ச்சியில் பேசிய ஜூக்கர்பெர்க், ஏ.ஐ., தான் தங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்றும், இது அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் மென்பொருளாக மெட்டா ஏ.ஐ., மாறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் 272 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும்,, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 211 பில்லியன் அமெரிக்கா டாலர் சொத்துக்களுடன் 2வது இடத்திலும், எல்.வி.எம்.எச்., தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 207 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.