வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு: ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை
வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு: ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை
ADDED : செப் 17, 2024 09:38 PM

வாஷிங்டன்: வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த சில ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை விதித்து உள்ளது.இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா ஊடகங்கள் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அதனை பல்வேறு நாடுகள் விசாரித்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக ஊடக நிறுவவனத்திற்கு ரகசியமாக நிதி அளிக்க முயன்றதாக 'ரஷ்யா டுடே' நிறுவனம் மீது அமெரிக்கா நீதித்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் உளவுத்துறை எந்திரத்தின் முழு நேர உறுப்பினராக 'ரஷ்யா டுடே' செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஜோ பைடன் நிர்வாகம், அதன் மீது பல்வேறு தடைகளை விதித்து உள்ளது.
இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா கிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மிகத்தீவிரமான பரிசீலனைக்கு பிறகு, ரஷ்யாவை சேர்ந்த ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறோம். அந்நாட்டை சேர்ந்த 'ரஷ்யா டுடே', ரோஸியா செகோட்ன்யா உள்ளிட்ட நிறுவனங்கள், சர்வதேச விவகாரங்களில் தலையிட்டதற்காக எங்களது செயலிகளில் இருந்து உலகம் முழுதும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தடைக்கு உள்ளான 'ரஷ்யா டுடே' நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தை 72 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
தடை தொடர்பாக இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தடை விதித்தாலும் எங்களது செய்திகள் உலகம் முழுவதும் சென்றடையும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் எங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, எங்களது செய்திகள் உலகம் முழுவதும் சென்றடைவதை தடுக்க முயற்சி நடக்கிறது என தெரிவித்து உள்ளது.
தடைக்கு உள்ளான மற்ற செய்தி நிறுவனங்கள், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. வாஷிங்டன்னில் உள்ள ரஷ்ய தூதரகமும் மவுனம் காக்கிறது.
பழைய கட்டுப்பாடு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த துவங்கியதும், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன. அந்நாட்டின் செய்தி ஊடகங்களுக்கு தடை விதிக்கும்படி ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் உக்ரைன் ஆகியன சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டன. இதனை ஏற்று மெட்டா நிறுவனமும், தனது கட்டுப்பாட்டில் உள்ள சமூக வலைதளங்களில் ரஷ்ய நிறுவனங்களின் விளம்பரம் செய்வதை தடுத்ததுடன், அதன் செய்திகளுக்கு பலரை சென்றடையாமல் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

