கலிதா ஜியா இறுதி சடங்கில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
கலிதா ஜியா இறுதி சடங்கில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு
ADDED : ஜன 01, 2026 12:41 AM

டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும் , பி. என்.பி., கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை கலிதாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் வழங்கினார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, 80, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இதையடுத்து, அவரின் இறுதிச்சடங்கு நேற்று டாக்காவில் அரசு மரியாதையுடன் நடந்தது. கலிதா ஜியாவின் கணவரும், முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மான் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, பி.என்.பி., எனப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவரும், கலிதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மானை சந்தித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் அளித்தார்.
மேலும், இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பில் தம் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

