மோடி என் சிறந்த நண்பர்: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்
மோடி என் சிறந்த நண்பர்: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்
ADDED : நவ 01, 2024 07:14 AM

வாஷிங்டன்: மோடி என் சிறந்த நண்பர். அவருடன் இணைந்து இந்தியாவுடனான உறவை வலுவாக்குவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவ.,5ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரம்ப்புக்கான ஆதரவு பெருகியிருப்பது கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. எனவே, இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்களை கவர்வதற்கு இரு வேட்பாளர்களும் முயன்று வருகின்றனர். குறிப்பாக, கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், எப்படியாவது அவரை பின்னுக்குத் தள்ளி, அமெரிக்காவாழ் இந்தியர்களின் மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்று டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய டிரம்ப், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். எனது ஆட்சியில் இதுபோன்று நடந்திருக்காது. அமெரிக்கா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கமலா ஹாரிஸூம், ஜோ பைடனும் புறக்கணிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஹிந்துக்களை பாதுகாப்பதோடு, அவர்களுக்கு எதிரான நிறவெறி தாக்குதலை தடுத்து நிறுத்துவோம். எனது ஆட்சியில் உங்களின் சுதந்திரத்திற்காக போராடுவோம். எனது சிறந்த நண்பர் மோடியுடன் இணைந்து இந்தியாவுடன் உறவை வலுவாக்குவோம்.
அதிக வரி மற்றும் விதிமுறைகளை உருவாக்கி சிறு தொழில்களை கமலா ஹாரீஸ் அழித்து விட்டார். ஆனால், நானோ, அவற்றை எல்லாம் ரத்து செய்து, வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரத்தை உயர்த்தினேன். மீண்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

