அமெரிக்காவில் முகமது யூனுஸ்: திரும்பிப் போ என எதிர்ப்பு கோஷம்!
அமெரிக்காவில் முகமது யூனுஸ்: திரும்பிப் போ என எதிர்ப்பு கோஷம்!
ADDED : செப் 24, 2024 08:24 PM

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் பங்கேற்க வந்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்க்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக இருப்பவர் முகமது யூனுஸ். நோபல் பரிசு பெற்றவர். இவரை தலைவராகக் கொண்டு, அரசு செயல்பட்டு வருகிறது. எனினும், பிரதான எதிர்க்கட்சியான பேகம் கலிதா ஜியாவின் கட்சியினர் அரசில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஷேக் ஹசீனா கட்சியினர் தாக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
இந்நிலையில் ஐநா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்த, இடைக்கால அரசின் தலைவர் யூனிஸ்க்கு நியூயார்க் நகரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நியூயார்க் நகரில் யூனுஸ் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர். திரும்பிப் போ என்றும் பதவி விலகு என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் சிலர், ஷேக் ஹசீனா எங்கள் பிரதமர் என்றும் கோஷம் எழுப்பினர்.
முஹம்மது யூனுஸ் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக, சட்ட விரோதமாக ஆட்சியைப் பிடித்தார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
எதிர்ப்பு கோஷம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

