ரஷ்யாவின் தலையீட்டுக்கு இடையே மால்டோவா அதிபர் தேர்தல் துவங்கியது
ரஷ்யாவின் தலையீட்டுக்கு இடையே மால்டோவா அதிபர் தேர்தல் துவங்கியது
ADDED : நவ 04, 2024 03:30 AM

சிசினாவ்: ரஷ்யாவின் தலையீட்டுக்கு இடையே, மால்டோவாவில் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று துவங்கியது. தேர்தல் முடிவுகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான மால்டோவா, உக்ரைனுக்கு அருகில் உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா 2022ல் போரைத் துவக்கியதும், ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு மால்டோவா ஆர்வம் காட்டியது.
தற்போதைய அதிபர் மியா சாண்டு, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாளராக உள்ளார்.
தனிப்பெரும்பான்மை
கடந்த அக்., 20ல், அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது, சாண்டு, 42 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றார். தனிப்பெரும்பான்மையை அவர் பெறவில்லை.
அதே நேரத்தில், ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அரசு வழக்கறிஞர் அலெக்சாண்ட்ரே ஸ்டோனியாங்க்லோ, 26 சதவீத ஓட்டுகளை பெற்றார். இந்தத் தேர்தலின்போது, ஐரோப்பிய யூனியனில் மால்டோவா சேர்வது தொடர்பாக மக்களிடையே கருத்து கேட்கும் ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது.
அதில், 50.35 சதவீத மக்கள் ஆதரவு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பான பேச்சு துவங்கியது.
கடந்த அக்டோபரில் நடந்த தேர்தலின்போது, ஓட்டளிப்பதில் பல மோசடிகள் நடந்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, மிரட்டல் விடுப்பது போன்றவை நடந்ததாக பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவை அனைத்தும், ரஷ்யாவின் துாண்டுதலில், அதன் பின்புலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மொத்தம், 25 லட்சம் மக்கள் தொகை உள்ள சிறிய நாடான மால்டோவாவில், 1.30 லட்சம் பேருக்கு, 329 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கருத்துக்கேட்பு
அதுவும், ரஷ்யாவில் உள்ள ஒரு வங்கியில் இருந்து இவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு, அதிபர் தேர்தலிலும், கருத்துக்கேட்பு ஓட்டெடுப் பிலும் பங்கேற்காமல் தடுக்க முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தவிர, பெரும்பாலான வாக்காளர்களுக்கு மொபைல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், மால்டோவா பிரதமர் டோனின் ரீகியான் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.
அதற்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சாண்டு மற்றும் ஸ்டோனியாங்க்லோ இடையே மிகக் கடினமான போட்டி இருக்கும் என்பது தெரியவந்துஉள்ளது.