வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: எதிராக போராடிய துறவி கைது
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: எதிராக போராடிய துறவி கைது
ADDED : நவ 25, 2024 06:43 PM

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மத துறவியை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது முதல் தற்போது வரை, ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டு தலங்கள், வீடுகள், சொத்துகள், உடமைகள் சேதம் அடைக்கின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என , முகமது யூனுஷ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதியளித்த போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறாக, தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்த போராட்டத்தை, அந்நாட்டில் உள்ள பண்டரிக் தம் என்ற ஹிந்து மத அமைப்பின் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி தலைமை ஏற்று நடத்துகிறார். ரங்பூர் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி இவரது தலைமையில் போராட்டம் நடந்தது. பிறகு அங்கிருந்து தலைநகர் டாக்காவிற்கு வந்த இவரை, விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டத்தின் போது காவிக்கொடி ஏந்தியதற்காக தேச துரோகம் உள்பட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கிருஷ்ண தாஸ் கைதுக்கு ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.