மயோட் தீவை புரட்டிய சூறாவளி 1,000க்கும் மேற்பட்டோர் பலி
மயோட் தீவை புரட்டிய சூறாவளி 1,000க்கும் மேற்பட்டோர் பலி
ADDED : டிச 17, 2024 01:06 AM

பாரிஸ்,மயோட் தீவை தாக்கிய 'சிண்டோ' என்ற சக்திவாய்ந்த சூறாவளியால், 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதி மயோட். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடும் அவதி
இதில், எவ்வித ஆவணமும் இன்றி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வாழ்கின்றனர். சமீபத்தில், இங்கு சிண்டோ சூறாவளி புயல் தாக்கியது.
கனமழையுடன் மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் வீசிய இந்த புயலால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள், மருத்துவமனைகள் சேதமடைந்தன.
பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன. சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
இதுதவிர ஏராளமான மின்கம்பங்கள் சரிந்ததால், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்து, தனி விமானங்கள் வாயிலாக பிரான்சில் இருந்து மயோட் தீவுக்கு வந்த மீட்புப்படையினருடன், அந்நாட்டின் ராணுவத்தினரும் வந்தனர்.
மீட்புப்பணியில் ஈடுபட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
கடும் பாதிப்பை ஏற்படுத்திய சிண்டோ புயலால், இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
பலி அதிகரிக்கக்கூடும்
ஏராளமானோர் படுகாயமடைந்ததால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, மயோட் தீவை தாக்கிய புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதி களில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.