இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூல்: திரும்பக்கேட்கிறார் விஜய் மல்லையா!
இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூல்: திரும்பக்கேட்கிறார் விஜய் மல்லையா!
ADDED : டிச 18, 2024 09:25 PM

லண்டன்: '' அமலாக்கத் துறையும், வங்கிகளும், என்னிடமிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்ததை நியாயப்படுத்த தவறினால், நான் சட்டபூர்வமாக நிவாரணம் தேட முயற்சிப்பேன்,'' என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
பல வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். அவரை பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து உள்ளது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பார்லிமென்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது,'' எனக்கூறி இருந்தார்.
இது தொடர்பாக விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடன் வசூல் தீர்ப்பாயம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன், வட்டியுடன் சேர்த்து 6,203 கோடி ரூபாய் என்று உத்தரவிட்டது. இன்று பார்லிமென்டில் பேசிய நிதி அமைச்சர், விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்றதன் மூலம் அமலாக்கத்துறை 14,131 கோடி ரூபாய் வசூலித்து வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். அப்படி இருந்தும் நான் இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளி! அமலாக்கத் துறையும், வங்கிகளும், என்னிடமிருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்ததை நியாயப்படுத்த தவறினால், நான் சட்டபூர்வமாக நிவாரணம் தேட முயற்சிப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் மல்லையா கூறியுள்ளார்.