ஈரானில் முல்லாவா - ஷாவா; இந்தியாவின் எதிர்பார்ப்பு என்ன?
ஈரானில் முல்லாவா - ஷாவா; இந்தியாவின் எதிர்பார்ப்பு என்ன?
ADDED : ஜன 18, 2026 07:22 AM

மேற்காசிய நாடான ஈரானில் நடந்து வரும் தொடர் போராட்டங்கள், பல அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் பஹ்லவி அரசக் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அந்த நாடு திரும்பலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
தற்போதுள்ள, முல்லா எனப்படும் மதத் தலைவர் ஆட்சியைவிட, பஹ்லவி அரசக் குடும்பமே மேல் என்பது அமெரிக்காவின் வாதம். ஆனால், அமெரிக்க ஆதரவு கொள்கையுள்ள 'ஷா' எனப்படும் அரசாட்சி, இந்தியாவுக்கு எதிராகவே எப்போதும் இருந்துள்ளது என்பது வரலாறு.
ஆதரவு
அதனால், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாகிவிடும், பிராந்தியத்தில் அமைதியை குலைத்துவிடும் என்பது இந்தியாவின் கவலையாக உள்ளது.ஈரானில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது போராட்டங்கள் மிகவும் தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும், கொந்தளிப்புடனும் நடந்து வருகின்றன. இதை, அமெரிக்கா தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளது. அதனால் தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குரல் கொடுத்து வருகிறார்.
திரைமறைவில், துாதரக மற்றும் அரசியல் ரீதியில், ஈரானில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க, அமெரிக்கா முயன்று வருகிறது. அதில் ஒன்றுதான், பஹ்லவி குடும்பத்தின் தலைமையில் ஈரானில் ஆட்சி மாற்றம் என்ற கோஷம். கடந்த, 1979ல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின்போது, பஹ்லவி குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது பட்டத்து இளவரசராக உள்ள முகமது ரெசா ஷா பஹ்லவி, 65; தன் 18 வயதில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். நாட்டை வலுப்படுத்த, நவீனப்படுத்த, 47 ஆண்டுக்குப் பின், நாடு திரும்பத் தயாராக உள்ளதாக அவர் கூறி வருகிறார்.
ஈரானில் தற்போதுள்ள மதத் தலைவரின் ஆட்சியின் மீது, இந்தியாவுக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏதும் இல்லை. ஆனால், ஈரானில் மீண்டும் ஷா ஆட்சி ஏற்படுவதையும் இந்தியா விரும்பவில்லை. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. முதலில், ஒருவேளை பஹ்லவி ஆட்சியைக் கைப்பற்றினாலும், அவரால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமெரிக்காவின் கைப்பாவையாகவே அவர் இருப்பார். மேலும், பொருளாதார, அரசியல், ராணுவம் என பல வகைகளில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவை நிச்சயம் அவர் நாடுவார்.
இது, நம் நாட்டு நலன்களுக்கு எதிராகவே இருக்கும். முதலில், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் அதையும் தாண்டியுள்ள நாடுகளுடனான இணைப்பில் பாதிப்பு ஏற்படும். மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் போன்றவற்றை ஈரான் வழியாகவே தற்போது நாம் அணுகி வருகிறோம்.
இந்த அனுமதி நமக்கு கிடைத்ததற்கு, ஈரானின் பெருந்தன்மை காரணம் இல்லை. அதன் அமெரிக்க எதிர்ப்பு கொள்கையே. இதனால் தான், அமெரிக்காவின் நெருக்கடிக்கு மசியாமல், சாபஹார் துறைமுகம் மற்றும் பிற அணுகு பாதைகளை உருவாக்க இந்தியாவுக்கு ஈரான் அனுமதித்தது.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இந்த ஓட்டையை, பஹ்லவி குடும்பத்தின் மூலம் அமெரிக்கா அடைத்துவிடும். அமெரிக்க ஆதரவு ஈரான் அரசை நம்ப முடியாது என்ற நிலைக்கு ஆப்கானிஸ்தான் வந்துவிடும். அப்போது அது பாகிஸ்தானை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதுபோன்ற சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதே இந்தியாவின் நீண்ட நாள் அச்சமாகும்.
மத்திய ஆசியா மற்றும் அதையும் தாண்டியுள்ள நாடுகளுக்கான பாதை அடைக்கப்படுவது ஒரு பக்கம் என்றாலும், ஷா ஆட்சியின்போது அந்த நாட்டுடன் கசப்பான வரலாற்றையும் இந்தியா மறக்க முடியாது.
பனிப்போர் காலத்தில், பஹ்லவி குடும்பம், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளை மட்டும் செயல்படுத்தவில்லை. அதையும் தாண்டி, பாகிஸ்தானுடனான போர்களில் இந்தியாவுக்கு எதிராக செயல் பட்டது.
நெருக்கம்
கடந்த, 1965ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, அமெரிக்கா ஆயுதத் தடையை விதித்தது. இதனால், பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆயுதம் கிடைப்பது தடைப்பட்டது. அப்போது ஈரான், பாகிஸ்தானுக்கு ஆதாரவாக செயல்பட்டு, மற்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி, தன் நாட்டின் வழியாக, பாகிஸ்தானுக்கு கொடுத்தது.
இதுபோலவே, 1966 மற்றும் 1967ல், பாகிஸ்தானுக்கு, 90 எப்---86 சப்ரே போர் விமானங்களை ஈரான் வாங்கிக் கொடுத்தது. மேற்கு ஜெர்மனியில் இருந்து அவை, டெஹ்ரானுக்கு வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து, ஈரான் விமானிகள், பாகிஸ்தான் ராணுவ உடையில், அவற்றை பாகிஸ்தானுக்கு ஓட்டிச் சென்று கொடுத்தனர்.
இவை அமெரிக்காவுக்கு தெரியாமல் நடக்கவில்லை. அந்த நேரத்தில் ஈரானுடன் நல்ல நட்பு இருந்ததால், அமெரிக்கா, கண்டும் காணாமல் இருந்தது. கடந்த, 1971ல், கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாடு பலவீனமடைந்தது. அப்போது நடந்த போரில், தற்போது வங்கதேசம் எனப்படும் கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவாக இருந்தது.
அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஈரான் குரல் கொடுத்தது. இந்தியா மிகவும் ஆக்ரோஷத்துடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.இதெல்லாம், பஹ்லவி குடும்பத்தின் கொள்கையோ, தனிப்பட்ட விருப்பமோ இல்லை. அப்போதைய சோவியத் யூனியனின் ஆதிக்கத்துக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்றது என்பதாலேயே பாகிஸ்தானுடன் ஈரான் நெருக்கம் காட்டியது.
முக்கியத்துவம்
'ஷா எனப்படும் மன்னர் தலைமையிலான ஈரான் அரசு , நடுநிலையாக இருக்காது. அது எப்போதும்போல், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருக்கும். மேற்கத்திய நாடுகளின் கை அசைவுக்கு ஏற்ப ஆடக்கூடியது' என்பதை, நம் நாடு தெளிவாக புரிந்து கொண்டுள்ளது.ஈரானின் மன்னர் ஆட்சி, 47 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தாலும், அந்தக் குடும்பத்தின் ரத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை மத்திய அரசு நிச்சயமாக நம்புகிறது.
ஏற்கனவே, பட்டத்து இளவரசர் முகமது ரெசா ஷா பஹ்லவி, தன் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.அதனால், ஈரானில் மீண்டும் ஷா ஆட்சி ஏற்படுவது, நம் நாட்டின் நலனுக்கு சாதகமாக இருக்காது. அதே நேரத்தில், ஷா ஆட்சியில் மதவாதம் இருக்காது; நவீனத்துவத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். அதனால், தற்போதைய மதத் தலைவர்கள், ஷா போல் மாறி, தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது.

