ADDED : ஆக 08, 2025 01:26 AM

பாங்காக்:மியான்மரின் தற்காலிக அதிபராக இருந்த மைன்ட் ஸ்வே, 74, உடல்நலக்குறைவால் காலமானார்.
தென்கிழக்கு ஆசிய நாடானா மியான்மரில், 2021ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. முன்னாள் அதிபர் வின் மியின்ட்டையும், உயர்மட்டத் தலைவர் ஆங் சான் சூச்சியையும் ராணுவம் கைது செய்தது.
இதைத் தொடர்ந்து முன்னாள் துணை அதிபராக இருந்த மைன்ட் ஸ்வே, ராணுவத்தின் ஆதரவுடன் தற்காலிக அதிபரானார். நரம்பியல் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட மைன்ட் ஸ்வே, ஓராண்டிற்கும் மேலாக தன் அதிபர் கடமையில் இருந்து விலகி மருத்துவ ஓய்வில் இருந்தார்.
இந்தநிலையில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து நேபிடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மைன்ட் ஸ்வே நேற்று உயிரிழந்தார்.
கடந்த, 2011 - 2016ல் மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனின் முதல்வராக இருந்தவர் மைன்ட் ஸ்வே. சர்வதேச அளவில் குங்குமப்பூ புரட்சி எனப்படும், 2007ல் நடந்த புத்த துறவிகள் தலைமையிலான மக்கள் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர் என்ற சிறப்பைப் பெற்றவர்.
மியான்மரில் தற்போது உள்ள ராணுவ ஆட்சி, இந்தாண்டு இறுதியில் தேர்தலை நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்து உள்ளது.

