10 ஆண்டுக்கு முன் மாயமான மலேசிய விமானம்: புதிய தொழில்நுட்பத்தால் விலகுமா மர்மம்?
10 ஆண்டுக்கு முன் மாயமான மலேசிய விமானம்: புதிய தொழில்நுட்பத்தால் விலகுமா மர்மம்?
ADDED : நவ 03, 2024 09:41 AM

கோலாலம்பூர்: 10 ஆண்டுக்கு முன் மாயமான மலேசிய விமானம் இதுவரை என்ன ஆனது என கண்டுபிடிக்க முடியாத நிலையில், நவீன தொழில்நுட்பம் பதில் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பத்து ஆண்டுக்கு முன், 2014 மார்ச் மாதம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த எம்எச்370 விமானம் சில மணி நேரங்களில் மாயமானது. கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
மிகத் தீவிரமான தேடுதலுக்கு பிறகும் அந்த விமானம் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், தேடியும் எந்த பயனும் இல்லை. இதனையடுத்து 2017ம் ஆண்டு விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
ஆப்ரிக்க கடற்கரை மற்றம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மாயமான விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், கறுப்புப்பெட்டிகள் உள்ளிட்ட விமானத்தின் பெரும்பகுதி பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. பல ஆயிரம் சதுர கிலோமீட்டரில் 200 மில்லியன் டாலர்கள் செலவில் சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா அரசுகளின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனிடையே,' வீக் சிக்னல் புரோபகேசன் ரிப்போர்டர்(wspr) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் விமானம் குறித்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனையே , ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.
சில சமூக வலைதளவாசிகள் கூறும், ஏலியன் காரணம் என்ற கட்டுக்கதைகளையும் எலான் மஸ்க் ஏற்க மறுக்கிறார். தனது ஸ்பேஸ் நிறுவனத்தின் 6000 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றி வருவதாகவும், ஒருமுறை கூட ஏலியன் பிரச்னை வந்தது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், விண்வெளியில் இருக்கும் கருந்துளைக்குள் சென்று விமானம் மறைந்து இருக்கலாம்; வேற்று கிரகவாசிகளால் அது பாதிக்கப்பட்டு இருக்கலாம் என பலவிதமான கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.
இந்த எம்எச் 370 விமானம் குறித்த மர்மம், விமான போக்குவரத்து துறைக்கு பெரிய சவாலாகவே விளங்குகிறது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல வழிகளில் அதற்கு விடையை தேட வேண்டிய நிர்பந்தத்தையும் அது கொண்டு வந்துள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பங்கள் உதவிகரமாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் செயற்கை நுண்ணறிவானது, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் வாய்ப்புள்ளது. விமான போக்குவரத்தில் குறிப்பாக அதன் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏஐ மூலம், கடந்த கால தகவல்களை ஆராய்ந்து, தோல்விகளை, அது நிகழும் முன்னர் தடுக்க முடிவதுடன், பாதுகாப்பையும் அதிகரிக்க முடியும் என்று வல்லுனர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
ஏஐ கருவிகள் மூலம் திட்டமிடலை மேம்படுத்துவதுடன், வானிலை மற்றும் நெரிசல் முறைகளை பகுப்பாய்வு செய்ய முடியும். ஏஐ மூலம் செயல்படும் அமைப்புகள் விமானிகளுக்கு உரிய நேரத்தில் உதவியை வழங்குவதுடன், விமான மோதல்களை தவிர்க்கவும் உதவும்.
குவாண்டம் தொழில்நட்பம் விமானங்களின் பாதுகாப்பில் பெரியமாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்றும் நிபுணர்கள் மத்தியில் வலுவான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
விமான போக்குவரத்துக்கு மிக அதிகமாக பயன்படுத்தப்படுவது ஜிபிஎஸ் சிக்னல்கள் தான். ஆனால் உலகில் பல்வேறு நாடுகளில் நிலவும் மோதல்கள், புவி அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜிபிஎஸ் சிக்னல்கள் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன.
அப்படி சிக்னல் முடக்கப்பட்டாலும், குவாண்டம் சென்சார் மூலம் விமானங்களை பாதுகாப்புடன் இறக்கிவிட முடியும் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.எது எப்படியோ, மனித குல வரலாற்றில், விடை காண முடியாத மர்மங்களில் ஒன்றாக மாறிவிட்ட இந்த சம்பவம், எதிர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
புதிய தொழில்நுட்பங்கள், காணாமல் போகும் விமானத்தை உடனுக்குடன் கண்டறியவும், பத்தாண்டாக விடை தெரியாமல் இருக்கும் மர்மத்தை உடைக்கவும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதே, அவைரது எதிர்பார்ப்பாக உள்ளது.