குடும்ப ஆட்சி போதுமடா சாமி; கும்பிடு போட்டனர் இலங்கை மக்கள்; ராஜபக்சே மகன் படுதோல்வி!
குடும்ப ஆட்சி போதுமடா சாமி; கும்பிடு போட்டனர் இலங்கை மக்கள்; ராஜபக்சே மகன் படுதோல்வி!
UPDATED : செப் 22, 2024 07:34 PM
ADDED : செப் 22, 2024 10:06 AM

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே படுதோல்வி அடைந்துள்ளார்.
மக்கள் புரட்சி
2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அமோகமாக வென்ற கோத்தபய ராஜபக்சே 3 ஆண்டுகளில் ஆட்சியை மக்கள் புரட்சியால் இழந்து நாட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இடைக்கால அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடியும் நிலையில், செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
75 சதவீதம்
திட்டமிட்டபடி நேற்று அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிய ஓட்டு சதவீதம் 75 ஆக பதிவானது. தேர்தல் நடந்த அன்றே ஓட்டுகளும் எண்ணப்பட்டன. அதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுர குமார திசநாயகே 42 சதவீதம் ஓட்டுகளை பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
2 சதவீதம்
தேர்தலில், எஸ்.எல்.பி.பி., கட்சியின் அதிபர் வேட்பாளராக களத்தில் இறங்கிய நமல் ராஜபக்சே வெறும் 2 சதவீதம் ஓட்டுக்களையே கடந்துள்ளார். முதலிடத்தில் உள்ள அனுர குமார திசநாயகே மற்றும் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை ஒப்பிடும் போது நமல் படுதோல்வி அடைந்து இருக்கிறார். அவர் வாங்கிய ஓட்டு வெறும் 2 சதவீதம் என்ற அளவிலே உள்ளது.
ஓரங்கட்டிய மக்கள்
ஹம்பந்த்தோட்டா மாவட்டத்தில் மட்டும் தான் நமலுக்கு அதிக ஓட்டுகள் விழுந்திருக்கின்றன. அங்கு அவருக்கு 26,707 ஓட்டுகள் (6.25%) பதிவாகி உள்ளன. கொழும்பு, கம்பா, கண்டி, மாத்தளை, காலே, யாழ்ப்பாணம், புத்தாளம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1 முதல் 2 சதவீதம் ஓட்டுக்களைத் தான் அவர் பெற்றுள்ளார். அம்பாறை மாவட்ட வாக்காளர்கள் நமலை ஓரங்கட்டிவிட்டனர். அங்கு அவருக்கு வெறும் 318 (1.22%)ஓட்டுகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.
வெளியேற்றம்
படுதோல்வியில் நமல் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாக அவரது மனைவி லிமினி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அவரது தந்தை திலகசிறீ வீரசிங்கேவுடன் விமானம் மூலம் துபாய்க்கு பறந்துவிட்டார். 2 நாட்கள் முன்பு நமல், லிமினியின் இரு குழந்தைகள், லிமினி தாயார், பணிப்பெண் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
புறக்கணிப்பு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலில் ஒட்டுமொத்தமாக இலங்கை வாக்காளர்கள் நமலை புறந்தள்ளி விட்டனர் என்பது தான் நிதர்சனம்!
ஒரு காலத்தில் இலங்கை மொத்தமும் ராஜபக்சே குடும்ப ஆட்சியில் இருந்தது. அண்ணன் அதிபர், தம்பி பிரதமர், இன்னும் சில தம்பிமார்கள் அமைச்சர்கள், மகன் ஒரு அமைச்சர், உறவினர்களுக்கு பசையுள்ள பதவிகள் என மொத்த குடும்பமும் இலங்கையை சுற்றி வளைத்து சூறையாடியது. அதனால் வெறுப்படைந்த மக்கள், குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினரை சம்மட்டி அடி கொடுத்து விரட்டி அடிக்கும் வகையில் இந்த தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.