விண்வெளி வீரர்களை மீட்க நல்ல ஐடியா சொல்லுங்க; காசு கொடுத்து யோசனை கேட்குது நாசா!
விண்வெளி வீரர்களை மீட்க நல்ல ஐடியா சொல்லுங்க; காசு கொடுத்து யோசனை கேட்குது நாசா!
UPDATED : டிச 07, 2024 10:07 PM
ADDED : டிச 05, 2024 11:06 AM

வாஷிங்டன்: விண்வெளி வீரர்களை மீட்டு வர, நல்ல யோசனையாக தெரிவிக்கும்படி விஞ்ஞானிகளுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. சிறப்பான திட்டத்திற்கு 17 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா சார்பில் பல்வேறு ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. விண்வெளிக்குச் செல்வது, நிலவுக்குச் செல்வது, விண்வெளி ஆய்வு நிலையம் செல்வது, வேற்று கிரகங்களுக்கு செல்வது போன்ற திட்டங்கள் இவற்றில் அடக்கம். இவ்வாறு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் போது, பல்வேறு சிக்கல்களை நாசா எதிர்கொள்கிறது.
தற்போதும் கூட, விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவரை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை நாசா செய்திருக்கிறது. எனினும், இதுபோன்ற சிக்கல்கள் எதிர்கால திட்டங்களிலும் ஏற்படலாம் என்று நாசா கருதுகிறது.
குறிப்பாக, நிலவில் கரடுமுரடான நிலப்பரப்பில், விண்வெளி வீரர்கள் சிக்கித் தவிக்கும் பட்சத்தில் அவர்களை மீட்பதற்கான, சிறப்பான திட்டங்களை விஞ்ஞானிகளிடமிருந்து நாசா வரவேற்கிறது. இதற்கென சந்திர மீட்பு அமைப்பு என்ற பெயரில் நாசா இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வரை தங்களது புதுமை திட்டத்தை சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் சிறப்பான திட்டத்திற்கு இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.