ADDED : அக் 05, 2025 12:31 AM

வாஷிங்டன்: அரசு நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா, தன் வலைதள பக்கத்தில், 'நாசா தற்போது மூடப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு நிர்வாக செலவினங்களுக்கான பட்ஜெட் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறவில்லை. இதையடுத்து, நிதி ஒதுக்கீடு இல்லாமல், பல துறைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது, உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.
நாசாவின் அத்தியாவசியமற்ற அனைத்து அன்றாட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாசாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களில், 15,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், நாசா தன் வலைதள பக்கத்தை புதுப்பிப்பதையும் நிறுத்தியுள்ளது-.
மேலும், நாசாவின் வலைதள பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'அரசு நிதியுதவியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நாசா தற்போது மூடப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாசாவின் இணைய பக்கத்தில், பொதுமக்களுக்கான தகவல்களை வழங்குவது மற்றும் புதுப்பிப்பது, ஊடக தொடர்பு மற்றும் சமூக ஊடக பக்கங்களை பராமரிப்பது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது இது நிறுத்தப்பட்டுள்ளதால், நாசாவில் நடக்கும் பணிகள் குறித்து அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம், 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாசாவுக்கான நிதியை, 2.18 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.65 லட்சம் கோடி ரூபாயாக குறைத்து கடந்த மே மாதம் அறிவித்தது.
இதில் அறிவியல் திட்டங்களுக்கு 33 சதவீதமும், நாசா திட்டங்களுக்கு 47 சதவீதமும் குறைத்திருப்பதால் ஆய்வு பணிகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.