தனியார் விண்கலம் 'புளூ கோஸ்ட்': நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது
தனியார் விண்கலம் 'புளூ கோஸ்ட்': நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது
ADDED : மார் 02, 2025 07:05 PM

வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்தின் விண்கலம், நிலவில் இன்று வெற்றிகரமாக தரை இறங்கியது.
அமெரிக்காவை சேர்ந்த பயர்பிளை ஏரோஸ்பேஸ் நிறுவனம், புளூ கோஸ்ட் என்ற விண்கலத்தை ஜன.,15ல் நிலவுக்கு ஏவியது. இது, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், 'நாசா' மற்றும் தனியார் நிறுவனத்தின் கூட்டுத் திட்டம் ஆகும். திட்டப்படி 2 வாரங்கள் நிலவை சுற்றி வந்த புளூகோஸ்ட் விண்கலம், சில மணி நேரங்களுக்கு முன் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது.
நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கிய முதல் தனியார் நிறுவன விண்கலம் இதுதான் என்று திட்டத்தில் பணியாற்றிய டாக்டர் சைமன் பார்பர் தெரிவித்தார். இந்த விண்கலம், நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று அந்த நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு இன்டியூசிவ் என்ற தனியார் நிறுவனம், 'ஒடிசிஸ்' என்ற தங்கள் விண்கலத்தை நிலவில் தரை இறக்கியது. ஆனால், பள்ளத்தில் இறங்கி விட்டதால் அந்த விண்கலம் குப்புற விழுந்து பழுதாகி விட்டது. இதே நிறுவனம், வரும் நாட்களில் தங்கள் இன்னொரு விண்கலத்தை நிலவில் தரை இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.