ஈரானை மீண்டும் தாக்குவது அவசியம்; அமெரிக்காவுக்கு நேட்டோ ஆதரவு
ஈரானை மீண்டும் தாக்குவது அவசியம்; அமெரிக்காவுக்கு நேட்டோ ஆதரவு
ADDED : ஜூலை 08, 2026 07:03 PM

அங்காரா: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் நடத்தி இருக்கும் தாக்குதல் நிச்சயம் அவசியமானவை என்று நேட்டோ அறிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே 3 வர்த்தக் கப்பல்களை ஈரான் படைகள் தாக்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதை தொடர்ந்து ஈரானின் முக்கிய கட்டமைப்புகளை நோக்கி அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்களை தொடங்கின.
நேற்று நடைபெற்ற இந்த தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை அமெரிக்கா சேதப்படுத்தியது. அதேநேரத்தில், ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில், பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் போர் தொடங்கி உள்ளது.
இந் நிலையில், துருக்கி அங்காரா நகரில் நேட்டோ அமைப்பின் 2026ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது;
இந்த தாக்குதல் மிகவும் அவசியமானது என்று நான் நினைக்கிறேன். போர் நிறுத்தத்தை ஈரான் மீறி இருக்கிறது. நேற்று கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டோம். இதற்கு அமெரிக்கா பதிலடி தருவது முக்கியம் என்று கருதுகிறேன்.
இவ்வாறு மார்க் ரூட்டே கூறினார்.
