ADDED : மே 16, 2025 08:41 PM
அன்டால்யா:போர் அச்சுறுத்தல்கள், பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ராணுவ முதலீடுகளை அதிகரிக்கும்படி அமெரிக்கா கூறியது தொடர்பாக, 'நேட்டோ' அமைப்பில் உள்ள நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கானது இந்த அமைப்பு.
ஐரோப்பாவில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்துக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என, நேட்டோ நாடுகளுக்கு, அமெரிக்கா சமீபத்தில் ஆலோசனை கூறியது.
ஐரோப்பாவைத் தவிர மற்ற பிராந்தியங்களில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக அமெரிக்கா தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான துருக்கியில், நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இதில், பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டன.
ஏற்கனவே, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதம் வரை, ராணுவத்துக்கு முதலீடுகள் செய்ய இந்த நாடுகள் முன் வந்தன.
அமெரிக்காவின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது, அடுத்த ஏழு ஆண்டுகளில், 5 சதவீதம் வரை இந்த முதலீடுகளை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இந்த போர் முடிவுக்கு வந்த பின், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில், ரஷ்யா மீண்டும் தன் முழு ராணுவ பலத்தை பெற்று விடும். அப்போது அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் என, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.