தாய் அடைந்த பெருமை; ஹார்வார்டு பல்கலையில் நீடா அம்பானி உருக்கம்
தாய் அடைந்த பெருமை; ஹார்வார்டு பல்கலையில் நீடா அம்பானி உருக்கம்
ADDED : பிப் 18, 2025 10:19 PM

ஹார்வார்டு பல்கலை: அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலையில் இன்று சிறப்புரையாற்றிய ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீடா அம்பானி, தன் தாயார் அடைந்த மகிழ்ச்சி பற்றி உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டது, அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீடா அம்பானி, அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலையில் இன்று நடந்த இந்திய தொழில்துறையினருக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
இன்று காலை என்னுடைய தாயார் எனது இரு மருமகள்கள் ராதிகா மற்றும் ஸ்லோகாவை அழைத்தார். அவர்களிடம் பேசிய அவர், 'நீடா மாணவியாக இருந்தபோது ஹார்வார்டு பல்கலை சென்று படிக்க ஆசைப்பட்டார். எங்களிடம் வசதி இல்லாததால் நாங்கள் அவரை படிக்க வைக்க முடியவில்லை.
ஆனால் இன்று தங்கள் பல்கலையில் சிறப்புரையாற்ற வரும்படி ஹார்வார்டு பல்கலையே அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது மிகுந்த பெருமையாக இருக்கிறது' என்று முகத்தில் பெருமிதம் பொங்க கூறினார்.
அந்த வகையில் இன்றுதான் என் தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தருணம். அவருக்கு அந்த மகிழ்ச்சியை கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நீடா அம்பானி பேசினார்.
தொடர்ந்து பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் நீடா பதில் அளித்தார். பிரதமர் மோடி, உங்கள் கணவர் முகேஷ் அம்பானி இருவரில் யார் முக்கியம் என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நீடா, பிரதமர் மோடி நாட்டுக்கு மிகவும் தேவையானவர். என் கணவர் முகேஷ் வீட்டுக்கு மிகவும் தேவையானவர் என்றார்.

