நாடும் இல்லை; கொடியும் இல்லை! பதக்கம் மட்டும் பெறலாம்; பாரிஸ் ஒலிம்பிக்கில் இது புதுசு!
நாடும் இல்லை; கொடியும் இல்லை! பதக்கம் மட்டும் பெறலாம்; பாரிஸ் ஒலிம்பிக்கில் இது புதுசு!
UPDATED : ஆக 03, 2024 04:15 PM
ADDED : ஆக 03, 2024 12:55 PM

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகளில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரஷ்யா, இந்த முறை அதில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கை யிலான ரஷ்ய வீரர்கள், நடுநிலையான தனி நபர் என்ற பெயரில் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
வாய்ப்பில்லை
ஒலிம்பிக் போட்டித்தொடர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் ரஷ்யா என்ற நாட்டின் பெயர் வந்து செல்லும். அந்நாட்டு வீரர்களின் பங்களிப்பும், பதக்கம் வென்று ஆர்ப்பரிக்கும் அவர்களின் உற்சாகமுமே இதற்கு காரணம்.
ஆனால், 10,000க்கும் அதிகமான வீரர்கள் கலக்கி வரும் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இம்முறை அதுபோன்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில் சுய அடையாளத்தை இழந்துள்ளனர் ரஷ்ய, பெலாரஸ் நாடுகளின் வீரர்கள்.
என்ன காரணம்?
உக்ரைன் நாட்டுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் எதிரொலியாக, ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் நடப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.
ஏ.ஐ.என்., அடையாளம்
இதனால், போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர்கள் வென்றால் அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக தனிக்கொடி, நடுநிலை வீரர்கள் பாடல் மட்டுமே ஒலிக்கப்படும். மேலும், பிரெஞ்ச் சொற்றொடரான Individual Neutral Atheletes என்பதன் சுருக்கமான AIN என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இருக்கு... இல்லை
AIN பிரிவில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் 32 வீரர்கள் பளு தூக்குதல், மல்யுத்தம் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றனர். நேற்று நடைபெற்ற டிராம்போலைன் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை வியலேட்டா பார்டிசிசுலோஸ்கயா வெள்ளி வென்று AIN என்று தான் அடையாளப்படுத்தப்பட்டார்.
பதக்கம் இருந்தும், நாட்டின் பெயரும், கொடியின் அடையாளமும் இல்லை என்பது சுயத்தை இழந்ததாகத்தான் பொருள் என்கின்றனர் விளையாட்டு விமர்சகர்கள். முந்தைய டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், ரஷ்ய வீரர்கள், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி (ஆர்.ஓ.சி.,) என்ற பெயரில் பங்கேற்றனர். இந்த முறை மொத்தமாக தடை விதிக்கப்பட்டதால், பெரும்பாலான வீரர்கள், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.