யோகா மூலம் ஆன்மிக சுற்றுலா பயணிகளை கவர நேபாளம் புதிய முயற்சி!
யோகா மூலம் ஆன்மிக சுற்றுலா பயணிகளை கவர நேபாளம் புதிய முயற்சி!
ADDED : செப் 22, 2024 09:43 PM

காத்மாண்டு: ஆன்மிக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மெகா யோகா நிகழ்ச்சி நடத்த நேபாள சுற்றுலாத்துறை, அந்நாட்டு ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நேபாள ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது:ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாக, வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மெகா யோகா நிகழ்ச்சி நடத்த உள்ளோம். உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்தியல் மற்றும் நேரடியாக பயிற்சி அளிக்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேபாள ஹோட்டல் அசோசியேஷன் தலைவர் பினாய் க்ஷா கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் நேபாளம் உலகப் பயணச் சந்தையில் விருப்பமான யோகா மற்றும் ஆன்மிக தலங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்த விரும்புகிறது.
ஆன்மிகச் சுற்றுலாவை மேம்படுத்த ஆண்டுதோறும் இத்திருவிழா நடத்தப்படும். யோகாவின் கலை மற்றும் அறிவியல் இமயமலையில் இருந்து உருவானது. மனிதர்களுக்கு பண்டைய ஞானத்தை கற்பித்த முதல் யோகி சிவபெருமான் தான் என்றார்.
நேபாள வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க யோகா பயிற்சியாளர் லதா துலாச்சன் கூறியதாவது: சிவபெருமானின் உறைவிடமான இமயமலையில் இருந்து தோன்றியதாக நம்பப்படும் இந்த பண்டைய ஞானத்தை நாங்கள் பரவலாக்க விரும்புகிறோம். யோகா, பிராண யாமம், தியானம், வரலாற்று பின்னணி, பயிற்சியுடன் இணைக்கப்பட்ட தத்துவ ஞானம் குறித்த சொற்பொழிவுகள் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அளிக்கப்படும்.
யோகா நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், தனிநபரின் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்துகிறது,இவ்வாறு அவர் கூறினார்.