பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்; ஒப்புக்கொண்டார் இஸ்ரேல் பிரதமர்!
பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்; ஒப்புக்கொண்டார் இஸ்ரேல் பிரதமர்!
ADDED : நவ 11, 2024 07:02 AM

ஜெருசலேம்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி மூலம் தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானில் ஹிஸ்புல்லா படையினரை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கடந்த செப்.,17,18ம் தேதிகளில், லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனத்திடம் ஹிஸ்புல்லா அமைப்பு புகார் அளித்தது. 'மனித குலத்திற்கு எதிராகவும், தொழில்நுட்பத்திற்கு எதிராகவும் ஒரு பயங்கரமான போரை இஸ்ரேல் நடத்துகிறது' என குற்றம் சாட்டி இருந்தது. புகார் அளித்த சில நாட்களுக்கு பிறகு, பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்ததாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டார். 'லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் நடத்த பச்சைக்கொடி காட்டியது பிரதமர் நெதன்யாகு தான்' என நெதன்யாகு செய்தி தொடர்பாளர் ஓமர் டோஸ்டரி தெரிவித்தார்.