போர் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி; சர்வதேச நீதிமன்றத்தை சாடிய நெதன்யாகு!
போர் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி; சர்வதேச நீதிமன்றத்தை சாடிய நெதன்யாகு!
UPDATED : நவ 22, 2024 07:58 AM
ADDED : நவ 22, 2024 07:56 AM

ஜெருசலேம்: 'தனக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி தரப்படும்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதற்காக, சர்வதேச நீதிமன்றத்தை பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக சாடியுள்ளார். சமூக வலைத்தளத்தில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஈரான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடந்த போர்க் குற்றங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.
என் மீதும், இஸ்ரேல் நாட்டின் , முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் மீதும் வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இஸ்ரேலிய அதிகாரிகள் காஸாவில் உள்ள பொதுமக்களை பாதிப்பிலிருந்து விடுவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கிறார்கள். காசாவில் உள்ள 97 சதவீத மக்களுக்கு போலியோவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு இஸ்ரேல் வழிவகுத்தது. இது எங்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டும் நீதிமன்றத்திற்கு தெரியவில்லை.
இஸ்ரேல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், எங்கள் ஆண்களின் தலையை துண்டித்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை. எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள். எங்கள் வெற்றி உங்கள் வெற்றியாக இருக்கும். காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான நாகரீகத்தின் வெற்றி. எனக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காஸாவில் உள்ள குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்களை நெதன்யாகு நிர்வாகம் தடை செய்துள்ளது. இது கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் குழந்தைகள் உட்பட இறப்புகளுக்கு வழிவகுத்தது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.