டிரம்ப் எச்சரிக்கையை மீறி புதிய உச்ச தலைவர் தேர்வு
டிரம்ப் எச்சரிக்கையை மீறி புதிய உச்ச தலைவர் தேர்வு
ADDED : மார் 10, 2026 02:19 AM

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எச்சரிக்கையை மீறி ஈரானின் புதிய உச்ச தலைவராக, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, 56, நியமிக் கப்பட்டுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பலகட்ட எச்சரிக்கைகளுக்குப் பின், மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த 28ம் தேதி தாக்குதலை துவங்கின.
ஒப்புதல் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, 86, கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. 10வது நாளாக போர் நேற்றும் தொடர்ந்தது.
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், ஈரான் அதை கண்டுகொள்ளவில்லை.
மேலும், ஈரானின் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் தன் பங்கு இருக்க வேண்டும் என்றும், எங்களிடம் ஒப்புதல் பெறாவிட்டால், அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், போரில் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி, அடுத்தத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய உச்ச தலைவரை தேர்வு செய்ய, 88 மதகுருக்களை கொண்ட நிபுணர் சபை ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஓட்டெடுப்பின் மூலம், மொஜ்தபா கமேனியை, நாட்டின் மூன்றாவது உச்சத் தலைவராக அந்த சபை நேற்று அறிவித்துள்ளது.மொஜ்தபா, இடைநிலை மதகுரு பதவியில் இருந்தாலும், எந்த அரசு பதவியும் வகிக்கவில்லை. ஆனால், தந்தையின் கீழ் பாதுகாப்புப் படைகளில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்தார்.
நியமனம் இந்த பதவி ஈரானின் அனைத்து அரசு விவகாரங்களிலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
ஏற்கனவே இஸ்ரேலும், ஈரானுக்கு புதிதாக யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர்களையும் கொல்வோம் என்று எச்சரித்துள்ளது.
டிரம்ப்பிடம் ஒப்புதல் இல்லாமல் தலைவரை நியமித்து இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

