நியூயார்க்கின் 'கமகம' ஹோட்டல் தமிழகத்தின் 'செம' முதலிடம்
நியூயார்க்கின் 'கமகம' ஹோட்டல் தமிழகத்தின் 'செம' முதலிடம்
ADDED : ஜூன் 08, 2025 12:27 AM

நியூயார்க் :அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறந்த, 100 உணவகங்கள் பட்டியலில், தமிழக மற்றும் கேரள உணவு வகைகளை விற்பனை செய்யும் 'செம' உணவகம் இந்தாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக தலைநகரம் என்று நியூயார்க் அழைக்கப்படுகிறது. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் இவற்றில் சிறந்த, 100 உணவகங்களை பல்வேறு விதிகளின்படி தேர்வு செய்து, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை பட்டியலிடுகிறது.
இந்த பட்டியலில், இந்தாண்டு தமிழக உணவுகளை விற்பனை செய்யும், 'செம' முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2021ல் துவங்கப்பட்ட இந்த உணவகத்தை ரோனி மஜும்தார், சிந்தன் பாண்ட்யா ஆகிய இருவர் நடத்துகின்றனர். இங்கு, தலைமை, 'செப்' ஆக தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளார்.
இந்த ஹோட்டலின் உணவு பண்டங்கள் பெயர்களை தமிழிலேயே வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி நண்டு மசாலா, இறால் தொக்கு, முயல் பிரட்டல், திண்டுக்கல் பிரியாணி ஆகியவை இந்த ஹோட்டலின் முக்கிய உணவுகள். இவற்றின் விலை 1,500ல் இருந்து 3,500 ரூபாய் வரை உள்ளது.
முதலிடம் பெற்றது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், 'தமிழக, கேரள மக்கள் மட்டுமின்றி அமெரிக்க மக்களும் இந்த உணவகத்துக்கு வருகின்றனர். அதற்காக உணவின் சுவையில் எந்த மாற்றமும் செய்யாமல் வழங்குகிறோம்; அவர்களும் விரும்பி உண்கின்றனர்' என்றனர்.