ADDED : மார் 17, 2025 03:26 AM

புதுடில்லி: நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு நேற்று வந்தார்.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக, ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார்.
டில்லியில், வெளியுறவு இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் அவரை வரவேற்றார். ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கிறிஸ்டோபர் லக்சன் இன்று சந்திக்கிறார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துகிறார். டில்லியில் நாளை நடக்கும் ரைசினா கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.
இதையடுத்து, 19 - 20ல், மஹாராஷ்டிராவின் மும்பைக்கு செல்லும் கிறிஸ்டோபர் லக்சன், தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
இந்திய பயணம் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்ட பதிவில், 'நியூசிலாந்து மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பை இந்தியா வழங்குகிறது. இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த ஆவலாக உள்ளேன்' என, குறிப்பிட்டுஉள்ளார்.
இதற்கிடையே, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை, நியூசிலாந்து பிரதமர் நேற்று இரவு சந்தித்து பேசினார்.