ADDED : ஜூன் 02, 2026 02:04 AM
மலேஷியா: சமூக தளங்களுக்கு தடை
தென்கிழக்காசிய நாடான மலேஷியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் புதிய விதிமுறை களை பின்பற்ற தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 23 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என மலேஷிய அரசு எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான்: கடைகளை மூட உத்தரவு
ஈரான் போரினால் நிலவும் எரிபொருள் மற்றும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ள, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களை இரவு 8:00 மணிக்குள் மூட வேண்டும் என, அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
தென்கொரியா: தீ விபத்தில் 5 பேர் பலி
கிழக்காசிய நாடான தென்கொரியாவின் டேஜியோனில் உள்ள 'ஹன்வா ஏரோஸ்பேஸ்' என்ற ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலியானவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை: கார் மோதி ஆறு பேர் பலி
நம் அண்டை நாடான இலங்கையின் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியில், புத்த மத விழா நேற்று நடந்தது. விழா கொண்டாடிய மக்கள் கூட்டத்திற்குள், மதுபோதையில் இருந்த நபர் ஓட்டிய கார் ஒன்று புகுந்ததில் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என, ஆறு பேர் பலியாகினர்; 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
