UPDATED : டிச 03, 2018 05:40 PM
ADDED : டிச 03, 2018 02:44 PM

தோகா : ஒபேக் (Opec) எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேறுவதாக கத்தார் அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒபேக் அமைப்பில் இருந்து கத்தார் விலகுவதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் ஷாத் அல் காபி அறிவித்துள்ளார். அதே சமயம் இந்த வாரம் வியன்னாவில் நடக்கும் ஒபேக் கூட்டத்தில் கத்தார் கலந்து கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபேக் அமைப்பில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளின் கூட்டம் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
இந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1961 ம் ஆண்டு முதல் ஒபேக்கில் உறுப்பினராக இருந்து வரும் கத்தார், இந்த அமைப்பில் குறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கத்தார் குறைவாக செய்தாலும், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கத்தார்தான் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. 2019ல் இருந்து உலகின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முழுக்க முழுக்க இறங்க போவதாக தெரிவித்துள்ளது. 77 மில்லியன் டன்னில் இருந்து 110 மில்லியன் டன் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய போவதாக கத்தார் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா அளித்து வரும் அழுத்தமும் ஒபேக் அமைப்பில் இருந்து கத்தார் வெளியேற முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
