நியூயார்க்கை வசீகரிக்கும் நீலகிரி யானைகள்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்ரியா சாகு பெருமிதம்
நியூயார்க்கை வசீகரிக்கும் நீலகிரி யானைகள்; ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்ரியா சாகு பெருமிதம்
ADDED : செப் 06, 2024 12:43 PM

சென்னை: நீலகிரியில் தயாரிக்கப்பட்ட யானை உருவம் கொண்ட பொம்மைகள் நியூயார்க்கிற்கு கொண்டு சென்றிருப்பது பெருமையளிப்பதாக முன்னாள் வனத்துறை அதிகாரியும், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செயலாளருமான சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
பிரச்சாரம்
ஆசிய வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி அமெரிக்க யானைகளின் குடும்பம் எனும் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த யானைகளின் இடம்பெயர்வு எனும் பிரசாரத்தை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். உள்நாட்டு கைவினைக் கலைஞர்கள், கலாசார மையங்களின் உதவியுடன் மனித - வனவிலங்குகளுக்கான வாழ்வியலை உருவாக்குவதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.
பெருமை
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தத்ரூபமாக யானை உருவம் கொண்ட 100க்கும் மேற்பட்ட பொம்மைகள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
வீடியோ
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முன்னாள் வனத்துறை அதிகாரியும், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செயலாளருமான சுப்ரியா சாகு, நீலகிரியில் பழங்குடியின மக்களால் லந்தனா கமாரா எனும் செடி உள்ளிட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட யானை உருவம் கொண்ட பொம்மைகள், புகழ்பெற்ற நியூயார்க் நகரத்திற்கு சென்றடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யானை உருவ பொம்மைகளை நீலகிரியைச் சேர்ந்த பெத்தகுரும்பா, பனியா, கட்டுநாயக்கன் மற்றும் சோலிகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இணைந்து தயாரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.