நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
ADDED : அக் 04, 2025 05:19 PM

புதுடில்லி: வங்கி பண மோசடி வழக்கில் நாடு கடத்தப்பட இருக்கும் தொழிலதிபர் நீரவ் மோடியிடம் புதிதாக எந்த விசாரணையும் நடத்தப்பட மாட்டாது என்று பிரிட்டனிடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498.20 கோடி கடனை பெற்று, அதனை திருப்ப செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பி சென்று விட்டார். பிறகு, சி.பி.ஐ., அளித்த புகாரின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேண்ட்ஸ்வெர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. நீரவ் மோடியை நாடு கடத்தவும் லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாகக் கூறி, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, நீரவ் மோடி 10 முறை தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, கடந்த மாதம் தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீரவ் மோடி, பிரிட்டன் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை என்ற பெயரில் தன்னை சித்ரவதை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், இதனால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு வரும் நவம்பர் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகார் தொடர்பாக நீரவ் மோடியிடம் புதிதாக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்றும், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையே தொடரும் என்று இந்தியா தரப்பில் பிரிட்டனுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
நீரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் சாலையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார். அண்மையில் பிரிட்டன் அதிகாரிகள் நீரவ் மோடி அடைக்கப்பட இருக்கும் ஜெயிலில் ஆய்வு செய்தனர்.
இதற்கு முன்பு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்தும் போது கூட, இதே மாதிரியான உத்தரவாதத்தை இந்தியா அளித்திருந்ததது. அதாவது, தனிமைச் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்றும், சர்வதேச தரத்திலான ஜெயிலில் தான் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.