UPDATED : ஜூலை 30, 2025 04:47 PM
ADDED : ஜூலை 30, 2025 11:01 AM

நியூயார்க்: பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யாவின் துாரக்கிழக்கு பகுதியிலும், அமெரிக்காவின் ஹவாய் தீவிலும், ஜப்பானிய தீவுகளிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வருவதாக, ஹவாய் தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கம்சாட்கா பகுதியில் இன்று(ஜூமல 30) ரிக்டர் அளவுகோலில் 8.7ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யா மட்டுமல்லாது, ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய், அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா, சீனாவின் ஷாங்காய் மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு சக்லைன் பகுதியில் சுனாமி அலைகள் எழும்பி கடற்கரையோர கட்டங்களை மூழ்கடித்தன. அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் துறைமுக நகரமான குரில்ஸ்க் நகரில் கடுமையான சுனாமி அலைகள் தாக்கின. படகுகள், சிறுகப்பல்கள் தூக்கி வீசப்பட்டன. அந்நகரில் வசிக்கும் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
ஹவாயில் எழும்பிய சுனாமி அலைகள்
அமெரிக்காவின் ஹவாய் தீவில் இப்போது சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வருகின்றன. நேரம் செல்லச்செல்ல அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது.
சுனாமி தாக்கும் என அஞ்சி ஹவாய் தீவின் ஹூனாலுலு நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு விட்டனர். இதனால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது. தீவில் இருப்பவர்களும், கரையோரம் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில்
ஓபரா வின்ப்ரே உதவி
சுனாமி எச்சரிக்கையால், அவசரமாக வெளியேறுபவர்களுக்கு உதவும் வகையில், பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரே ஹவாய் தீவில், தன் பண்ணை வீட்டுச்சாலை வழியாக வாகனங்கள் செல்லும் வகையில், வழியை திறந்து விட்டுள்ளார்.
ஹவாய் கவர்னர் ஜோஷ் கிரீன் கூறுகையில், ''இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. சிறிய அலைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மணி நேரம் கழிந்த பிறகே, நிலைமை சரியாகி விட்டதை உறுதி செய்ய முடியும்,'' என்றார்.
இந்தியாவுக்கு பாதிப்பில்லை
73 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம்
ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் கொண்ட நிலநடுக்கம், 73 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம் என்று ரஷ்ய அறிவியல் மையத்தினர் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1952ம் ஆண்டு இப்பகுதியில் ரிக்டர் அளவில் 9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இப்போது தான் இந்தளவு கடுமையான நிலநடுக்கம் வந்துள்ளது; தொடர்ந்து ஏற்படக்கூடிய சிறு அதிர்வுகள் அடுத்தடுத்து வரலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பசுபிக் கரையோரத்தில் அமைந்துள்ள அமெரிக்க மாநிலமான ஓரிகனில், சில மணி நேரங்களில் சுனாமி அலைகள் தாக்கும் என்று அந்த மாநில அரசு எச்சரித்துள்ளது. மக்கள், கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் பல இடங்களில் சுனாமி அலைகள் தாக்கியது உணரப்பட்டுள்ளது. இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. எனினும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சுனாமி அலைகள் அமெரிக்காவின் மேற்கு கரை பகுதிகளை எட்டியுள்ளன. ஓரிகன், கலிபோர்னியா, வாஷிங்டன் கடற்கரைகளில் குறைந்த உயரம் கொண்ட சுனாமி அலைகள் எழும்பி வருவதாக பேரிடர் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர். ஹவாய் தீவுகளில் இன்னும் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் உள்ளன.
ஹவாய் தீவில் சுனாமி அச்சம் விலகி உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டவர்கள், மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
சுனாமியின் தாக்கம் பெரிய அளவில் இல்லாததால், எச்சரிக்கை வெளியிட்ட நாடுகள் அதை வாபஸ் பெற்றுள்ளன. அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களில் மட்டும் இன்னும் சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது.