ADDED : மே 12, 2026 02:09 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில், 'நோரோ வைரஸ்' மின்னல் வேகத்தில் பரவியதில், 100-க்கும் மேற்பட்ட பயணியர் மற்றும் ஊழியர்கள் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து கரீபியன் தீவுகளை நோக்கி பிரமாண்ட சொகுசு கப்பல் ஒன்று ஆயிரக்கணக்கான பயணியருடன் உற்சாகமாக புறப்பட்டது. பயணம் பாதியைக் கடந்த நிலையில், திடீரென சிலருக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
முதலில் உணவு நச்சுத்தன்மை என்று கருதப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. கப்பல் ஊழியர்களில் சிலரும் இதில் பாதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக பரிசோதனை செய்ததில், இது மிக மோசமாக பரவக்கூடிய 'நோரோ வைரஸ்' தொற்று என்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
