வட கொரிய ஆளும் கட்சி ஆண்டு விழாவுக்காக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பேரணி: காட்சிப்படுத்தப்பட்ட அணுசக்தி ஏவுகணை
வட கொரிய ஆளும் கட்சி ஆண்டு விழாவுக்காக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பேரணி: காட்சிப்படுத்தப்பட்ட அணுசக்தி ஏவுகணை
ADDED : அக் 12, 2025 04:08 AM

பியோங் கியாங்: வடகொரியாவின் ஆளும் கட்சியான கொரிய தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாபெரும் ராணுவ அணிவகுப்பில், சக்திவாய்ந்த புதிய அணுசக்தி ஏவுகணை முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், கொரிய தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சியின், 80வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், தலைநகர் பியோங் கியாங்கில் உள்ள கிம் இல் சங் சதுக்கத்தில் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.
இதில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார். சீன பிரதமர் லீ கியாங், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவரான டிமிட்ரி மெத்வதேவ், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டோ லாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராணுவ அணிவகுப்பில், இதுவரை சோதனை செய்யப்படாத 'ஹவாசாங் - 20' என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
இது, அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையான, 'ஹவாசாங் - 11 எம்.ஏ.,' பேரணியில் இடம்பெற்றது.
ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் பேசுகையில், “எந்த அச்சுறுத்தலையும் அழிக்கக்கூடிய, வெல்ல முடியாத அமைப்பாக தொடர்ந்து ராணுவம் வளர வேண்டும்,” என வலியுறுத்தினார்.