பிரிட்டன் அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு: டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளர் வேன்ஸ் போட்டார் ‛குண்டு'
பிரிட்டன் அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு: டிரம்ப்பின் துணை அதிபர் வேட்பாளர் வேன்ஸ் போட்டார் ‛குண்டு'
UPDATED : ஜூலை 17, 2024 01:54 PM
ADDED : ஜூலை 17, 2024 12:59 PM

வாஷிங்டன்: ‛‛ பிரிட்டன் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு '' என குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக 39 வயதான ஜே.டி.வேன்ஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சர்ச்சை
கடந்த வாரம் கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து நண்பர் ஒருவருடன் விவாதித்தேன். அது ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அது தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரிட்டன் தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, இது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரிட்டன் இருந்து வரும் நிலையில், துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் இந்த பகீர் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிராகரிப்பு
இக்குற்றச்சாட்டை மறுத்து பிரிட்டன் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் கூறியதாவது: இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம். நவ.,மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவருடன் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு ஒரு நாட்டை வகைப்படுத்துவதை நான் அங்கீகரிக்க மாட்டேன். பிரிட்டன் சார்பாக ஆட்சி செய்யவே விரும்புகிறோம். எங்களது சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.