என்விடியா விவகாரம்: சீனாவின் 3 பில்லியன் டாலர் ஏஐ திட்டங்களுக்கு சிக்கல்!
என்விடியா விவகாரம்: சீனாவின் 3 பில்லியன் டாலர் ஏஐ திட்டங்களுக்கு சிக்கல்!
ADDED : நவ 14, 2026 07:13 AM

பீஜிங்: அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான 'என்விடியா'வின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, என்விடியா சிப்களை நம்பியுள்ள சீனாவின் 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28,000 கோடிக்கு மேல்) மதிப்பிலான, ஏஐ திட்டங்கள் ஆபத்தில் சிக்கியுள்ளன.
அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் சீனாவின் ஏஐ டேட்டா சென்டர் சந்தையில் இருந்து தாங்கள் முழுமையாக வெளியேறிவிட்டதாக என்விடியா நிறுவனம் கூறி வந்தது. ஆனால், சீனாவில் தடையை மீறி என்விடியாவின் நவீன பிராசஸர்களைக் கொண்டு 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கம்ப்யூட்டர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் தகவல்:
சீனாவின் 150க்கும் மேற்பட்ட கொள்முதல் அறிவிப்புகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்ததாவது: சீனாவின் கடலோர தொழில்நுட்ப நகரங்கள் முதல், தொலைதூர மேற்கு மாகாணங்கள் வரை, என்விடியாவின் தடைசெய்யப்பட்ட எச்100, எச்200 மற்றும் எச்800 ஆகிய சிப்களை அடிப்படையாகக் கொண்டு டேட்டா சென்டர்கள் அமைக்கப்படுகின்றன.
சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்கள், பல்கலைகள் மற்றும் பிராந்திய கம்ப்யூட்டர் மையங்களிலும் என்விடியா தொழில்நுட்பம் ஆழமாகப் வேரூன்றியுள்ளது. இந்த 3.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், சிப்கள் மட்டுமின்றி, கட்டிடங்கள், மின்சார அமைப்புகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு செலவுகளும் அடங்கும்.
ஜென்சன் ஹுவாங் விலகலால் பாதிப்பு:
சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கும், ஆலிஸ் ஹுவாங்குடனான உறவு சர்ச்சையைத் தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சீனாவிற்கான சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என ஹுவாங் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தற்போது அவர் வெளியேறியுள்ளதால், அமெரிக்க எம்.பி.,க்கள், ஏற்றுமதி விதிகளை மேலும் கடுமையாக்க அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள மற்றும் திட்டமிடப்பட்டுள்ள சீனாவின் ஏஐ மையங்களுக்கு சிப் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், சீன நிறுவனங்கள் தங்கள் உள்நாட்டு சிப்களுக்கு ஏற்ப திட்டங்களை அதிக செலவில் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
கடந்த 2022ம் ஆண்டு முதல் சீனாவிற்கு நவீன ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இருப்பினும், 2026ம் ஆண்டின் முதல் பாதியில், சீனாவின் ஏஐ ஆக்சிலரேட்டர் ஏற்றுமதியில் என்விடியா 34 சதவீத பங்கைக் கொண்டிருந்ததாக ஐடிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிப்களை யார் வாங்குகிறார்கள் என்பதை மட்டும் கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் எனவும், எந்த நோக்கத்திற்காக இதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
