UPDATED : ஆக 23, 2024 12:35 PM
ADDED : ஆக 23, 2024 12:31 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் அதிபராக வேண்டும் என்றும், இதுவே அமெரிக்க, மற்றும் இந்தியா வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அமெரிக்க ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரீஸ், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் இடையே போட்டி நிலவுகிறது.
அமெரிக்க ஹிந்து அமைப்புகள் ஆவல்
கமலா ஹாரீஸ் அதிபராக வேண்டும் என இங்கு ஹிந்துக்கள் கொண்ட ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர் கூறுகையில்: கமலா ஹாரீஸ் வெற்றிக்கு நாங்கள் ஆதரவை திரட்டி வருகிறோம். அவருக்கு இந்தியர்கள் ஓட்டளிக்க வேண்டும் என கோரியுள்ளோம். இதற்கான பேரணியும் நடக்கவிருக்கிறது. அவரது வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இவரை யாரும் நிராகரிக்காமல், ஹாரிஸ் வேட்புமனுவை முழுமையாக ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஹிந்து அமைப்பினர் கூறினர்.
ஓம் ஷாந்தி கோஷம் !
அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் உரையாற்றும் ஜனநாயக கட்சி 3 நாள் கூட்ட துவக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஹிந்து குருக்கள் ராகேஷ் பட் வாழ்த்தி பேசினார். சமஸ்கிருதத்தில் நடந்த இந்த உரை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. 'எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேசம் என்று வரும்போது, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்றார். மேலும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம் மனம் ஒன்றாக சிந்திக்கட்டும். நம் இதயங்கள் ஒன்றாக துடிக்கட்டும். அனைத்து சமுதாய முன்னேற்றத்திற்காக. முயற்சி சக்தி வாய்ந்ததாக ஆகட்டும், நாம் ஒன்றிணைந்து நம் தேசத்தை பெருமைப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டார். ஓம் ஷாந்தி, ஓம் ஷாந்தி என்ற கோஷங்களை பலரும் எழுப்பினர்.
மேரிலாண்டில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
அமெரிக்க மொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் 1.5 சதவீதம் பேர் உள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டு இந்த தேர்தலில் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

