ஐ.நா., பொது சபையில் ஒலித்தது 'ஓம் ஸ்வஸ்தியஸ்து, ஓம் சாந்தி'
ஐ.நா., பொது சபையில் ஒலித்தது 'ஓம் ஸ்வஸ்தியஸ்து, ஓம் சாந்தி'
ADDED : செப் 25, 2025 12:32 AM
நியூயார்க்:இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, ஐ.நா., பொது சபைக் கூட்டத்தில் அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்கும் அழைப்பு விடுத்து, சமஸ்கிருதத்தில் வாழ்த்து கூறி உரையைத் தொடங்கினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐ.நா., பொது சபை கூட்டத்தில், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேற்று உரையாற்றினார்.
அப்போது உலகத் தலைவர்களை வாழ்த்தும் விதமாக, 'ஓம் ஸ்வஸ்தியஸ்து' என்று கூறி, தன் பேச்சை துவக்கினார். இது இந்தோனேஷியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலி தீவில் பயன்படுத்தப்படும் வார்த்தை.
நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்பதே, இந்த சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம்.
இதேபோன்று அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், முஸ்லிம்கள் வாழ்த்தான 'வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாது, யூதர்களின் ஷாலோம், ஹிந்துக்களின் ஓம் சாந்தி சாந்தி ஓம், புத்த மதத்தினரின் நமோ புத்தாயா' என்று கூறி உரையை முடித்தார்.
அனைவரும் ஒரே மனித குடும்பமாக வாழ வேண்டும் என்று ஐ.நா., சபையில் அவர் வலியுறுத்தினார். இந்தக் கனவை நனவாக்குவதில் இந்தோனேஷியா முழு பங்களிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.