ஒரு ரொட்டி பாக்கெட் ரூ.1100, ஒரு கிலோ வெங்காயம் ரூ.845! கண்ணீர் வரவழைக்கும் காசா
ஒரு ரொட்டி பாக்கெட் ரூ.1100, ஒரு கிலோ வெங்காயம் ரூ.845! கண்ணீர் வரவழைக்கும் காசா
ADDED : நவ 22, 2024 04:03 PM

காசா: காசாவில் ஒரு பிரெட் பாக்கெட் ரூ.1100க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.845க்கும் விற்கப்படுவதால் அங்கு வசிப்போர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும், பசி, பட்டினி, வறுமை என மக்கள் தவித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறி வருகிறது. போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு காசாவில் உள்ள லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கினாலும், அவற்றை பெற ஏராளமான மக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. உணவு பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் பசியிலும், பட்டினியிலும் தவித்து வருகின்றனர்.
தெற்கு காசாவில் மட்டுமல்லாமல் மத்திய காசா பகுதியிலும் மக்களின் நிலை பரிதாப சூழலில் காணப்படுகிறது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள பேக்கரிகள் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் அங்கு விற்கப்படும் உணவு பொருட்களின் விலை கேட்போரை தலைசுற்ற வைக்கிறது.
ஒரு பிரெட் பாக்கெட் (15 ரொட்டித்துண்டுகள் கொண்டது) விலை ரூ.1100 ஆக விற்கப்படுகிறது. சராசரியாக ஒரு துண்டு ரொட்டி மட்டும் 73 ரூபாய் எனலாம். இந்த பிரட் பாக்கெட்டை வாங்க முடியாமல் ஏராளமானோர் தவித்து பசியால் துவண்டு போயிருக்கின்றனர்.
பிரெட் பாக்கெட் மட்டுமல்லாமல் மற்ற உணவுகளின் விலையும் கேட்போரை மயக்கம் போட வைக்கிறது. ஒரு காபித்தூள் பாக்கெட் ரூ.110, ஒரு கிலோ வெங்காயம் ரூ.845, சமையல் எண்ணெய் ரூ.1,267 என விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, கட்டுப்பாடில்லாத விலை என காசா மக்களின் நிலை உலக நாடுகளை கவலைக் கொள்ள செய்திருக்கிறது.