ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் அமெரிக்காவில் இன்று ராஜினாமா
ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் அமெரிக்காவில் இன்று ராஜினாமா
ADDED : செப் 30, 2025 05:39 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் ராஜினாமா செய்ய உள்ளனர். இதன் முதற்கட்டமாக இன்று ஒரு லட்சம் பேர் ராஜினாமா செய்ய உள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடிவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டிலும் தன் அதிரடியை காட்டி அதிர்ச்சியளித்து வருகிறார்.
இதன் ஒருபகுதியாக நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதை இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, இன்று ஒரு லட்சம் ஊழியர்கள் ராஜினாமா செய்கின்றனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அரசு ஊழியர்களின் ராஜினாமா இன்று நடைபெற உள்ளது. இந்த எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின் ஒரே ஆண்டில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மிகப்பெரிய சரிவு இது என கூறப்படுகிறது.
கடந்த 1945 - 1946 காலகட்டத்தில், ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோன்று, 1990களில், பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 2.5 லட்சம் அரசு ஊழியர் நீக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு இறுதியில், 23 லட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இம்மாத இறுதியில் 21 லட்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பாண்டின் இறுதிக்குள், 12 சதவீதம் பேர் வெளியேறிவிடுவர் என கூறப்படுகிறது.
டிரம்பின் கொள்கைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மை இன ஊழியர்களை பெரியளவில் பாதித்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதிக்குள், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறினர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் நீண்டகால ஊழியர்கள் வெளியேறுவதால், அரசின் நிர்வாக அறிவும், நிபுணத்துவமும் பெரியளவில் இழக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், இதை மீண்டும் கட்டியமைக்க பல ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
அரசு ஊழியர்களின் இந்த ராஜினாமாவால் பல முக்கிய அரசு சேவைகள் தீவிரமாக பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், நடப்பாண்டில் அரசுக்கு 1.30 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால், எதிர்காலத்தில், ஆண்டுக்கு 2.46 லட்சம் ரூபாய் சேமிப்பாகும் என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.