தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றது 'ஓப்பன்ஹைமர்'

ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றது 'ஓப்பன்ஹைமர்'

ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றது 'ஓப்பன்ஹைமர்'


ADDED : மார் 11, 2024 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அணு ஆயுதத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் இயற்பியல் விஞ்ஞானி, ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஓப்பன்ஹைமர் திரைப்படம், ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சர்வதேச அளவில், திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 96வது ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள, 'டால்பி' அரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஏழு பிரிவுகளில் விருதுகளை வென்றது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் இந்த படம் விருதுகளை வென்றது.

சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான கிறிஸ்டோபர் நோலன் பெற்றுக் கொண்டார். சிறந்த நடிகருக்கான விருது ஓப்பன்ஹைமராக நடித்த சிலியன் மர்பிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியர் பெற்றுக்கொண்டார்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது ஹோய்டே வான் ஹோய்டெமாவுக்கும், சிறந்த படத்தொகுப்புக்கான விருது ஜெனிபர் லேமுக்கும், 'பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்' எனப்படும் சிறந்த பின்னணி இசைக்கான விருது லுட்விக் கோரன்சனுக்கும் வழங்கப்பட்டன.

கடந்த 30 ஆண்டுகளாக ஹாலிவுட் திரை உலகில் தனித்துவமான திரைப்படங்களை எடுத்து வரும் நோலன், மெமென்டோ, தி டார்க் நைட் ட்ரையாலஜி, தி பிரெஸ்டீஜ், இன்சப்ஷன் உட்பட பல முக்கியமான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

பலமுறை ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அவர், இப்போதுதான் முதல்முறையாக அந்த விருதை வென்றுள்ளார்.

இதுதவிர, புவர் திங்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்த எமா ஸ்டோன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு கிடைத்த மரியாதை

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில், 2022ல் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு நாட்டு...' பாடல், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை கடந்த ஆண்டு வென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சர்வதேச சினிமாவில் சண்டை பயிற்சியாளர்களின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உலகம் முழுதும் இருந்து பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற சிறந்த சண்டை காட்சிகள் தொகுக்கப்பட்ட 1.15 நிமிட வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., சண்டை காட்சியும் இடம் பெற்றது. மேலும், சிறந்த பாடலுக்கான விருது அறிவிக்கப்படும் போது, கடந்த ஆண்டு விருது பெற்ற, 'நாட்டு நாட்டு...' பாடல் ஒலிபரப்பப்பட்டது. 'ஆர்ஆர்ஆர் படத்தை மீண்டும் கவுரவப்படுத்தியதற்கு நன்றி' என, அப்படக்குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.



நிர்வாண கோலத்தில் ஜான் சீனா

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க, அமெரிக்க மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா, விருது பெறுபவரின் பெயர் அடங்கிய அட்டையால் தன்னை மறைத்தபடி நின்றார்.விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் விபரங்கள் திரையில் ஓடிய வேளையில், மேடை ஏறிய விழாக் குழுவினர், ஜான் சீனாவின் உடலை திரைச்சீலையால் மறைத்தனர். அதன்பின், புவர் திங்ஸ் படத்துக்கான சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது பெற்ற ஹோலி வாடிங்டன் பெயரை, அவர் அறிவித்தார்.



படத்தின் கதை என்ன?

இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவின் லாஸ் அலாமாஸ் என்ற இடத்தில், 'மன்ஹாட்டன் புராஜெக்ட்' என்ற பெயரில், முதல் அணு ஆயுதத்தை தயாரிக்கும் ரகசிய முயற்சியில் அமெரிக்க அரசு ஈடுபட்டது. இந்த திட்டத்துக்கு இயற்பியல் விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமை வகித்தார். அவரது குழு தயாரித்த அணு ஆயுதம், 1945ல் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஓப்பன்ஹைமருக்கு தெரியாமலேயே அவர் தயாரித்த அணு ஆயுதத்தை, ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி மீது பரிசோதிக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ்.ட்ரூமேன் உத்தரவிட்டார். இதற்கு ராபர்ட் ஓப்பன்ஹைமர் தன் எதிர்ப்பை பகிரங்கமாக தெரிவித்தார்.இது, அப்போதைய சோவியத் யூனியனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சோவியத் யூனியனும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டது. அதற்கு ராபர்ட் ஓப்பன்ஹைமர் ரஷ்யாவுக்கு உதவியதாக அமெரிக்கா நம்பியது. இதைத் தொடர்ந்து அவர் மீது விசாரணை நடந்தது. இந்த வரலாற்று சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஓப்பன்ஹைமர் என்ற திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் தயாரித்து இயக்கினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us