ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் ராஜினாமா
ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் ராஜினாமா
UPDATED : மார் 17, 2026 10:30 PM
ADDED : மார் 17, 2026 10:29 PM

வாஷிங்டன்: ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா இந்த போரில் ஈடுபட்டுள்ளது எனவும், ஈரானால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோ கென்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீண்ட ஆலோசனைக்கு பிறகு எனது பதவியில் இருந்து விலகுகிறேன். ஈரானுக்கு எதிரான போரில் என்னால், சிறந்த முறையில் ஆதரவு அளிக்க முடியாது. ஈரானால், தற்போதைக்கு அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவும், அமெரிக்காவில் உள்ள சக்தி வாய்ந்த குழுக்களாலும் இந்த போரை நாம் துவக்கி உள்ளோம் என்பது தெளிவாக தெரிகிறது. டிரம்ப்பின் வெளியுறவு கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்.
2025ம் ஆண்டு ஜூன் வரை, மத்திய கிழக்கில் நடக்கும் போர், அமெரிக்காவின் தேசபக்தர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பறித்ததுடன், நமது நாட்டின் செல்வத்தையும், செழிப்பையும் எப்படி சூறையாடும் சதி என்பதை நீங்கள் நன்கு உணர்ந்திருந்தீர்கள். டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தில் , முடிவில்லாத போர்களுக்குள் நம்மை இழுத்துவிடாமல் ராணுவ வல்லமையை எவ்வாறு தீர்க்கமாகப் பயன்படுத்துவது என்பதை நவீன கால ஜனாதிபதிகள் அனைவரையும்விட நீங்கள் மிகச் சிறப்பாக புரிந்து கொண்டிருந்தீர்கள். காசிம் சுலைமானியை கொன்றதுடனும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்து அதனை நிரூபித்து உள்ளீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜோ கென்ட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ' ஜோ கென்ட் ராஜினாமா செய்தது நல்ல விஷயம். அவர் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் பலவீனமான அதிகாரி. அத்தகைய நபர்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

