மியான்மர் எல்லையில் இருந்து இந்தியர்கள் 283 பேர் மீட்பு
மியான்மர் எல்லையில் இருந்து இந்தியர்கள் 283 பேர் மீட்பு
ADDED : மார் 11, 2025 09:24 AM

நைப்பியிதோ: தாய்லாந்து- மியான்மர் எல்லையில் 2 வாரங்களாக சிக்கித் தவித்த இந்தியர்கள் 283 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, தகவல்களை சரிவர விசாரிக்காமல் வெளிநாடு செல்வோர், குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி பலர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களிடம் சிக்கி உள்ளனர். அவர்களை அவ்வப்போது மத்திய அரசு மீட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கம்போடியா, லாவோஸ் நாடுகளில் இருந்து இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாய்லாந்து- மியான்மர் எல்லையில் 2 வாரங்களாக சிக்கித் தவித்த 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று சைபர் கிரைம் மோசடியில் மர்ம கும்பல் ஈடுபட செய்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மியான்மரில் போலி வேலை மோசடிகளால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 283 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இருக்கிறது. அவர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.