காங்கோ நாட்டில் சோகம்! ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி
காங்கோ நாட்டில் சோகம்! ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 25 பேர் பலி
ADDED : டிச 18, 2024 07:06 AM

கின்ஷாசா; காங்கோ நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 25 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அமைந்துள்ளது இனாங்கோ நகரம். இங்குள்ள பெமி ஆற்றில் 100க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று புறப்பட்டுச் சென்றது. சிறிது தூரம் சென்ற படகு, அதிகம் பேர் பயணித்ததால் பாரம் தாங்காமல் தத்தளித்தது.
ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை காப்பாற்றி கரைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் 25 சடலங்களை கைப்பற்றினர்.
படகில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததால் எத்தனை பேர் நீரில் மூழ்கினர் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் பயணித்தவர்களில் ஏராளமானோர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், இதே நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 80 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.